பத்தனம்திட்டா (கேரளம்): சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி 41 நாள்கள் தொடர்ச்சியாக ஒரு மண்டலம் பூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதனை மண்டல பூஜை என்பார்கள். இந்தாண்டு மண்டல பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் கோவிட்-19 பெருந்தொற்று விதிகளை கடைப்பிடித்து நவ.16ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க பங்கேற்றனர்.
அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். இதைத்தொடர்ந்து சபரிமலை சன்னிதானம் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தினார். பின்னர் நெய்யபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு வழக்கமான பூஜையும், உச்ச பூஜையும், தீபாதாரனையும் நடந்தன.
இன்று (நவ17) முதல் இனிவரும் 40 நாள்களும் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு சாத்தப்படும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.
மகர விளக்கு பூஜையிலும் ஐந்தாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரியவருகிறது. இதேபோல் ஒருமுறை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்ய முடியாது. அதே நேரத்தில் பக்தர்கள் வழிபாடு நடத்தவும், தங்களது வழிபாட்டு பொருள்களை சமர்பிக்கவும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.