விநாயகர் சதுர்த்தி தின விழா கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினத்தை தொடர்ந்து, அதன் பின்னர் ஒன்பது நாள்கள் வரை வழக்கமான கொண்டாட்டங்களும் நடக்கும்.
அந்த வகையில் ஈடிவி பாரத் தமிழ் ஒவ்வொரு நாளும் நமது நாட்டிலிலுள்ள பல்வேறு விநாயகர் கோயில்கள், அதன் தனிச்சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தது.
இதுவரைஉத்தரகாண்ட் விநாயகர் குகைக்கோயில், மகாராஷ்டிரா ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயில், கர்நாடகா ஹம்பி சாசிவே காலு கணபதி கோயில், சித்தூர் காணிபாக்கம் விநாயகர் கோயில், ராஜஸ்தான் த்ரிநேத்ரா (முக்கண்) கணபதி, திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனி சிந்தமன் கணேசா கோயில், சத்தீஸ்கர் தோலக்கு ஏகாதந்தா கோயில் ஆகியவை குறித்து பார்த்தோம்.
இன்று நமது அண்டை மாநிலமான கேரளத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மாத்தூர் மகா கணபதி கோயில் குறித்து பார்க்கலாம்.
பிரமாண்டமான மலைகள், அழகிய நீர்நிலைகளின் கைகளில் தவழும் பூமியான கேரளத்தின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மாத்தூர் என்ற பகுதியில் உள்ள மாதநந்தேஸ்வரர் சிவாலயத்தில் சித்தி விநாயகராக அருள் பாலிக்கிறார் மகா கணபதி.
கோயிலுக்குள் மகா கணபதி தெற்கு முகமாகவும், சிவபெருமான் கிழக்கு முகமாகவும் காட்சியளிக்கின்றனர். மதுவாஹினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயில் ஏறக்குறைய ஐந்து ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்ற தகவலும் நிலவுகிறது.
தற்போது, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் நிறைய மாற்றங்களைச் சந்தித்துள்ளன. நகரமயமாக்கலின் அறிகுறிகள் சுற்றுப்புறங்களில் அதிகரித்து காணப்படுகின்றன. இருப்பினும், கோயிலும் அதன் சிக்கலான கட்டடக்கலையும் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.
இந்தக் கோயிலில் ஒரு களிமண் விநாயகர் சிலை உள்ளது. இது 'சுயம்பு' (தானே உருவானவர்) என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் வழக்கமான திருவிழாக்கள் கொண்டாடப்படுவது கிடையாது. மூட்டப்ப சேவை (Moodappa seva) பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் விநாயகரின் உருவத்தை மறைக்கும் அளவுக்கு இனிப்பு அரிசி அப்பத்தை படைப்பார்கள். இதுவும் பல ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்படுகிறது.
மேலும், கோயிலில் மிக மிக நேர்த்தியான சிற்பங்கள், ஓவியங்கள், பஞ்ச பாண்டவர்களின் சிலைகளும் உள்ளன. இது 5000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் இருந்ததற்கான வலுவான அறிகுறியாக கருதப்படுகிறது.
மாற்றம் கொடுக்கும் மாத்தூர் மகா கணபதி! கோயிலில் உள்ள குளத்தின் புனித நீரில் மருத்துவ குணம் நிரம்பியிருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஒருமுறை திப்பு சுல்தான் படையெடுப்பின்போது, கோயிலை இடிக்கும் நோக்கத்தில் திப்பு சுல்தான் அணுகியதாகவும், அப்போது அவருக்கு தாகம் எடுக்கவே அங்கிருந்த குளத்தில் நீர் அருந்திய பின்னர் மனம் மாறியதாகவும் நம்பப்படுகிறது.
மாயிபாடி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் கேரள கலாசாரத்துடன் கண்டிகா கலாசாரமும் காணப்படுகிறது. மாதரு என்ற பெண்ணுக்கு சிவபெருமான் காட்சியளித்ததாகவும், அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டதாக தலவரலாறு கூறுகின்றது. இந்தக் கோயிலில் கேரளா மட்டுமின்றி கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
இதையும் படிங்க:கொண்டாட்டத்தில் கோலி, அனுஷ்கா தம்பதி: வைரலாகும் வீடியோ