ஆதாம், ஏவால் கதைகளைப் போலவே சிறுவயதிலிருந்தே நம் செவிகளில் அரங்கேற்றப்படும் கதைகள்தான் கண்ணனின் லீலைகள். அவனின் கதைகள் கார்டூன், நாடகம், திரைப்படம் என்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் நம்மை பின்தொடர்கிறது. குழல் ஊதும் குறும்புகாரனாக, ஆநிரை மேய்ப்பவனாக, வெண்ணெய் திருடி உண்ணும் சாப்பாட்டு ராமனாக, பெண்களை கேலி செய்யும் காமெடியனாக, மயிலிறகை முடித்த மாயனாக, கதைகளிளெல்லாம் இப்படி எல்லாம் பாவிக்கபட்ட அவன் நம் மனதில் ஆழமாய் பதிந்ததால்தான் அவனை கடவுள் என்று சொல்லும்போது எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், இன்றுவரையும் அவன் நம்முள் கடவுளாய் வாழ்ந்ததை விட நம் வீட்டு பிள்ளைகளின் குறும்புத்தனத்திலும் சேட்டைகளிலும் வாழ்ந்ததுதான் அதிகம். ஏதோ ஒரு பேருந்தின் சந்திப்பில் பெயர் தெரியாத பிள்ளையை கொஞ்சும் போது கூட 'கண்ணா!' என்று சொல்வதற்கே நம் உதடுகள் இடம் கொடுக்கின்றன. இப்படி அணு அணுவாய் ஊறிப் போனவன் கடவுள் என்ற பிம்பத்தை கழட்டி வைத்துவிட்டு நம்முள் காதல் மன்னனாக உரசிக் கொள்வதிலே ஆர்வம் காட்டுகிறான்.
கண்ணனை கவிதைகளால் விதைத்தவர்கள்! பாரதியும் கண்ணதாசனும்.. எங்கிருந்து வந்தான் இந்த கண்ணன்? துவாபர யுகத்தில் ஏதோ திருமால் என்பவர் எடுத்த பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாய் யமுனை கரையிலே எல்லோருடைய அடி மனதிலும் ஆழமாய் நுழைய அவதாரமெடுத்தான். ஆனால் மற்ற அவதாரங்களுக்கு இருக்கும் இலக்கியங்களை விட இந்த குறும்புகார அவதாரத்திற்கு இலக்கியங்கள் அதிகம். பெரும்பாலான பக்தி இலக்கியங்கள் இறைவனை இறைவனாகவே பாவித்து அவரை இறைவனாய் நிரூபிப்பதிலே குறியாக இருக்கும். ஆனால் இந்த மாயக்கண்ணுக்காவே எழுதப்பட்ட கண்ணன்பாட்டு அவனை பல பரிமாணங்களில் பார்க்க வைக்கிறது. கண்ணனாக அவதாரம் கண்டவன் பாரதியின் கவியால் இன்னும் பல அவதாரங்களைக் கொண்டான். தந்தையாக, தாயாக, பிள்ளையாக, நண்பனாக, காதலனாக, காதலியாக, அரசனாக, சேவகனாக, குருவாக, சீடனாக, இப்படி பல அவதாரங்களை உயிர்பித்த பெருமை பாரதியைச் சாரும்.
"மாடுகன்று மேய்த்திடுவேன்; மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்"
( கண்ணன் என் சேவகன் - 4)
என்று எளிய சொற்களால், கடவுளை வழிபடு பொருளாக அல்லாமல் பயன்படு பொருளாக பாரதியார் மாற்றுகிறார். சங்கு, சக்கரம் ஏந்திய திருமாலின் கைகளில் துடைப்பத்தைத் தூக்கி கொடுத்த தைரியம் பாரதிக்கே உரித்தானது. அவரின் கவிதையில் பிரசவித்த கண்ணம்மாதான் ஆண்களின் மனதில் காலங்கள் கடந்தும் ரகசிய காதலியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். "பாயும் ஒளி நீ எனக்கு" என்ற பாரதியின் வரிகள் உண்மையாகவே இந்த பிரபஞ்சம் முழுதும் பாய்ந்து கண்ணம்மாவை நினைவில் நிறுத்துகிறது. ஆண்களின் அகத்தில் காதலியாக கண்ணம்மாவும், பெண்களின் அகம் தாண்டி புறத்திலும் காதலனாக கண்ணனும் பரிணமிக்கிறார்.
"யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு தான் ஆடல்..." என்று கண்ணனை விரும்பும் ராதைகள்தான் ஏராளம். காதல் ராதைகள் என்றால் உடனே நம் நினைவிற்கு வருவது ஆண்டாளும் மீராவும்தான். 9ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தென் இந்தியாவை தன் பக்தியாலும் காதலாலும் நிரப்பியவள் ஆண்டாள். நடக்க பழகும்போதே கண்ணனின் கை பிடித்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் போலும், அவளுடைய திருப்பாவை பாசுரங்கள் அவளுடைய காதலை வாழவைத்துக் கொண்டே இருக்கிறது. தென்புலத்தார் ஆண்டாள் என்றால் வடபுலத்தார் மீராவை கைகாட்டுவார்கள். சிறுவயதில் அவள் தாய் மாயக்கண்ணனின் பொம்மையைக் கொடுத்து இவர்தான் உன் மணாளன் என்று விளையாட்டுதனமாகதான் சொல்லியிருப்பார். ஆனால் அதையே தன் வாழ்வின் வினைபயனாக வாழ்ந்து காட்டியவர் மீரா. இவள் பாடிய பாடல் இந்தி மொழியின் இலக்கியத்திற்கு கிடைத்த அளப்பெரிய வெற்றி. எப்படி ஆண்டாள் ஸ்ரீரங்கம் சென்று கண்ணனை அடைந்தாளோ, அதேபோல் மீராவும் துவாரகை சென்று கண்ணனை அடைகிறார். இன்னும் மீராவும் ஆண்டாளும் பெண்களின் இதயத்தில் பிரகாசித்து கொண்டிருக்கிறார்கள்.
தென்புலத்து ஆண்டாளும் வடபுலத்து மீராவும் கண்ணம்மாவை நமக்குக் காட்டிய பாரதியை போலவே கண்ணன் மீது கொண்ட தீராக்காதலால் முத்தையா தனக்கு 'கண்ணதாசன்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே! எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே!" என்ற அவரின் கவிதை வரிகள் குழலின் கானம் போலவே நம் காதுகளில் ஒலிக்கும். கண்ணனைப் போலவே தன் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்கள், கண்ணனைப் போலவே காதலனை தேடும் கோதைகள், கண்ணனைப் பெண் வடிவில் ஏற்று காதலிக்கும் கோமான்கள், இப்படி காதல் உணரப்படும் இடமெல்லாம் கண்ணனும் உயிர்பெறுகிறான். இதனாலே அந்த குறும்புக்காரனை காதல் மன்னன் என்று சொல்வதில் அகம் மகிழ்கிறோம்.