ராமநாதபுரம்: சிந்துவெளி நாகரீகத்தின் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகளை பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உத்தரகோசமங்கை அருகில் மரியராயபுரம் என்ற ஊர் கண்மாய் பொட்டலில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விஷால், அருள்தாஸ் ஆகியோர் ஆசிரியர் முனியசாமியுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தபோது, 20 பானை ஓடுகளில் குறியீடுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவுக்குத் தகவல் தந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வுசெய்த ராஜகுரு நுண்கற்காலக் கருவி, ரௌலட்டட் வகை ரோமானிய பானை ஓடு, கறுப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், சுடுமண் தாங்கிகள், துளையுள்ள பானை ஓடுகள், சிவப்புநிற சிறிய குவளை, சிறிய இரும்புக் கோடாரி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதிகள், மூடிகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், நீர் ஊற்றும் பகுதியுடைய பானையின் விளிம்புப் பகுதிகள், அலங்காரப் பானை ஓடு, சங்கு வளையல், பாசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பொட்டல் பகுதி முழுவதும் பழமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
பானை ஓட்டில் குறியீடுகள்
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 குறியீடுகளில், கறுப்பு சிவப்பு பானை ஓடுகளில் 15 குறியீடுகளும், சிவப்பு பானை ஓடுகளில் 5 குறியீடுகளும் உள்ளன. இதில் உள்ள 3 குறியீடுகள் சிந்துசமவெளி பகுதியில் கிடைத்த குறியீடுகள் எண் 125, 137, 365 போல அமைந்துள்ளன. இதில் எண் 125 குறியீடு ‘த’ எனும் தமிழி எழுத்து போலவும், எண் 137 குறியீடு பெருக்கல் குறியீடு போலவும் அமைந்துள்ளன. எண் 365 குறியீடு மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் சூலம் போல உள்ளது. இக்குறியீடு கீழடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.