தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்

மதுரை: கீழடி அகழாய்வுக் களத்தில் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு வகையிலும் ஆய்வுகள் மேற்கொண்டு வரலாற்றை வெளிக்கொணர்ந்ததில் மூன்று தொல்லியல் மாணவிகளுக்கும் பெரும் பங்குண்டு. அது குறித்த செய்தித் தொகுப்பு.

தொல்லியல் மாணவிகள்

By

Published : Oct 10, 2019, 1:27 PM IST

Updated : Oct 12, 2019, 12:54 PM IST

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ளது கீழடி. இங்குத் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள்,ஜூன் மாதம் 13ஆம் தேதி முழுவீச்சில் தொடங்கிதற்போது நிறைவுக்கு வந்துள்ளது .

இப்பணிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழடி அகழாய்வுக் களப் பொறுப்பாளர் ஆசைத்தம்பியின் தலைமையில் துறை சார் அலுவலர்களும், தொல்லியல் பயிலும் மாணவ, மாணவியர் பலரும் பணி செய்தனர். இவர்களில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பயிலும் மாணவியர் பொன்.அதிதி, சுபலட்சுமி, சுருதிமோள் ஆகியோர் மூன்று மாதங்களாக அகழாய்வுக் களத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

கீழடி அகழாய்வில் தொல்லியல் மாணவிகள் நிகழ்த்திய மற்றொரு புரட்சி

இதுகுறித்து சுபலட்சுமி கூறுகையில், 'சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை தொல்லியல் படிப்பை நிறைவு செய்துள்ளோம். தற்போது கல்வெட்டியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், கீழடி எங்களுக்கு முதல் வாய்ப்பைத் தந்துள்ளது. எங்களோடு பணி செய்யும் தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது..? தொல்லியல் சின்னங்களை அகழ்ந்தெடுப்பது, எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரிவர எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முழுவதுமாக கற்றுக் கொண்டுள்ளோம்.

ஆய்வில் தொல்லியல் மாணவிகள்

இதற்கு எங்களது மூத்த தொல்லியல் அலுவலர்கள் ஆலோசனை வழங்கியும் அவ்வப்போது கற்றும் கொடுக்கின்றனர். அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போதே; வருகின்ற பார்வையாளர்களுக்கும் நாங்கள் விளக்க வேண்டும். அதில் அதிகபட்ச பொறுமை தேவை. அவையெல்லாம் இந்தக் கீழடி அகழாய்வு எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது' என்றார்.

50 ஆண்டு கால ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால்... கீழடி குறித்து ஆசிரியர் பகிரும் தகவல்கள்

மாணவி பொன்.அதிதி கூறுகையில், 'நாங்கள் அண்மையில்தான் எங்களது தொல்லியல் படிப்பை நிறைவு செய்தோம். உடனடியாக மிகப் பெரிய கீழடி அகழாய்வுப் பணி கிடைத்தது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. இதற்குப் பிறகு நடைபெறக்கூடிய அகழாய்வுகளில் பங்கேற்பதற்கான ஊக்கமும், அனுபவமும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதேபோன்று அறிவியல்பூர்வமாக ஆய்வுகளை மேற்கொள்வது குறித்த அனுபவமும் கிடைத்துள்ளது' என்றார்.

தமிழர் தொன்மை காப்போம் - கீழடியில் சமுத்திரகனி

மற்றொரு மாணவி ஸ்ருதி கூறுகையில், 'ஒவ்வொரு நாளும் கீழடியில் எங்களுக்குக் கிடைக்கின்ற அனுபவங்கள் மிக அலாதியானவை. இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பதே எனக்கு மிகப் பெரும் போராட்டமாய் அமைந்துவிட்டது. எனது வீட்டிலும், வெளியிலும் இந்தப் படிப்பிற்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. உள்ளபடியே தொல்லியல் துறை மிகச் சவால் மட்டுமன்றி, தேடுதலும் நிறைந்த ஒன்றாகும்.

ஆய்வில் தொல்லியல் மாணவிகள்

பழங்காலச் சின்னங்கள், பண்பாடு இவற்றை அறிவதற்கான ஆர்வமே இந்தக் களத்தைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தூண்டுகோலாக அமைந்தது. பொதுவாகவே, இதுபோன்ற துறைகளில் பெண்கள் வரமுடியாது என்ற பொதுவான மனநிலை உள்ளது. ஆண்களால் மட்டுமன்றி, பெண்களாலும் இத்துறையில் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து நான் இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். ஆண்களுக்கு இணையாக இந்தத் துறையில் பெண்களும் சாதிப்பதற்கான வாய்ப்பை தொல்லியல் துறை ஏற்படுத்திக் கொடுக்கும்' என்றார்.

"கீழடி தமிழர் நாகரிகமே"- தொல்.திருமாவளவன்!

பொதுவாக தொல்லியல் துறையில் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவே. தொல்லியல் அறிஞர்கள் பத்மாவதி, மார்க்சிய காந்தி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட வெகு சிலரே இத்துறையில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தற்போது ஆர்வத்துடன் இளம் மாணவியர் பலர் வரத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி எனினும், இது அதிகரிக்க வேண்டும் என்பதே மாணவியரின் அறைகூவலாக இருக்கிறது.

கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்
Last Updated : Oct 12, 2019, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details