ஹைதராபாத்: தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பதுபோல் ஆடி மாதத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் என்னென்ன நடத்தலாம் எதை நடத்தக் கூடாது என்று நம் முன்னோர்கள் பிரித்துவைத்துள்ளனர்.
பொதுவாக தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாக கொண்டவை. சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை ஒவ்வொரு தமிழ் மாதமாக கருதுகிறோம்.
சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதங்களில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாக இது விளங்குகிறது.
ஆடி மாத சிறப்புகள்
அதுமட்டுமின்றி இம்மாதத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் சில வழிபாடுகளை ஏற்படுத்தினர். அதுவே ஆடிப்பெருக்கு. இதன் நோக்கம் உடலும் மனமும் உழைக்க வேண்டும் என்பதே.
எனினும் இக்காலங்களில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகின்றனர். சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. பல கிராமங்களில் கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்து திருவிழா நடத்துகின்றனர். மஞ்சள் தண்ணீர் கூல் போன்றவையும் ஊற்றப்படுகின்றன.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த ஆடி பெளர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள். பிள்ளையாரையும் வழிபடுவார்கள். திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.