’ஹலோ... ஹாய்... நான் பிரியா பேசுறேன்...’ இப்படித் தொடங்கும் பெண் குரலில் மயங்கி ஒன்றல்ல... இரண்டல்ல... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வலையில் விழுந்துள்ளனர். ஆனால், வலையில் விழுந்த எவரும் இச்செய்தி தெரிந்த பின்னர் அதிர்ந்துதான் போவார்கள். ஏனெனில், இப்படிப் பேசி பலரை மோசடி செய்த அப்பெண்ணை பிடித்தே தீருவது என்றெண்ணிப் போன காவல் துறையும் அதிர்ந்துதான் போனது!
பெண்ணை ஏமாற்றியதாகக் கூறி ஒரே மாதிரியான புகார்கள், மயிலாப்பூர் காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவில் வருவதும், ஆன்லைன் மூலம் கொடுக்கப்படும் இது தொடர்பாக புகார்தாரரை அணுகும்போது, அவர்கள் இப்புகாரை கொடுக்கவில்லை என மறுப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் ஒருவரின் உறவினர் உதயராஜ் என்பவரும், இதேபோன்று புகார் கொடுத்ததாகக் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
விசாரணையில், வேலைக்காக லோகண்டோ என்ற செயலி மூலம் விண்ணப்பித்ததாகவும், அப்போது 100 ரூபாய் செலுத்தி ஆபாசமாக உரையாடலாம் என பிரியா என்ற பெண் விளம்பரம் செய்ததைப் பார்த்து பணம் செலுத்தியதாகவும் உதயராஜ் தெரிவித்தார். 100 ரூபாய் அனுப்பியவுடன் பிரியாவின் நிர்வாணப் படம் தனது செல்போனுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து, வீடியோ காலில் பேச 1500 ரூபாய் செலுத்துமாறு பிரியா கேட்டு தகவல் வந்தவுடன் 1500 ரூபாயையும் செலுத்தியுள்ளார் உதயராஜ். பின்னர் வீடியோ காலில் ப்ரியா வராததால் ஏமாற்றமடைந்த உதயராஜுக்கு அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்திதான் வந்தது. உதயராஜை விசாரணைக்கு அழைக்கும்போதுதான், இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து உதயராஜுக்கு வந்த செல்போன் அழைப்பின் சமிக்ஞை (சிக்னல்), திருநெல்வேலி மாவட்டம் பணங்குடியைக் காட்ட, பிரியாவை பிடிக்க விரைந்தது காவல் துறை. அங்குபோன பிறகுதான் தெரிந்திருக்கிறது, தனது மயக்கும் குரலால் பேசி பல ஆண்களை வலையில் வீழ்த்தியது பிரியா அல்ல, பெண்குரலில் பேசி மோசடி செய்த ராஜ்குமார் ரீகன் என்ற இளைஞர் என்பது!