சென்னை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌதமன்(24). இவருக்கும் சென்னை பாடியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலமாக உருவான நட்பு, பின் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு தெரியாமல், கௌதமன் அந்த பெண்ணை திருப்பூர் மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் கௌதமன் அந்த பெண்ணிடமிருந்து 5 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் பணத்தையும் ஏமாற்றி வாங்கி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், தன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்ள சொல்லி அந்த இளம்பெண் வற்புறுத்த, குடும்பத்துடன் வந்து பெண் கேட்டு திருமணம் செய்துகொள்வதாக நாட்களைக் கடத்தியுள்ளார்.
இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கௌதமன், உன்னை அடைவதற்காகவே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்றால், 50 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வரதட்சணையை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்கவில்லை என்றால், தனிமையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், கௌதம் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கௌதமன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணிடம் ஆபாசப் பேட்டி: யூ-ட்யூபில் அப்லோடு செய்த மூவர் கைது!