நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகள் சிவரஞ்சனி (25). இவர் அரியலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
கரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பியவர் திருநாள்கொண்டச்சேரியில் உள்ள அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். சிவரஞ்சனி தனது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனது மாமா சக்கரபாணி மகன் நெடுமாறன் (36) என்பவரைக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்ததால் திருமணம்செய்து வைப்பதாக முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், சிவரஞ்சனியின் சகோதரி அண்மையில் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு, வீட்டைவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிவரஞ்சனியை திருமணம் செய்துகொள்ள நெடுமாறனின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனால், நெடுமாறன் சிவரஞ்சனியைப் புறக்கனித்துள்ளார். சம்பவ தினமான ஜூன் 11ஆம் தேதி சிவரஞ்சனி நெடுமாறனிடம் பேச முயற்சித்துள்ளார். ஆனால், நெடுமாறன் பேச மறுத்ததால், மன உளைச்சல் அடைந்த சிவரஞ்சனி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதனைக் கண்ட பக்கத்து வீட்டிலிருந்த நெடுமாறன் ஓடிவந்து, சிவரஞ்சனியை காப்பாற்ற முயற்சி செய்தபோது லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படுகாயம் அடைந்த சிவரஞ்சனியை நெடுமாறனும், அவரது உறவினர்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி சிவரஞ்சனி கடந்த ஜூன் 17ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் முடிவில், தற்கொலைக்கு தூண்டியது நெடுமாறன் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் நெடுமாறனை நேற்று (ஜூன் 27) கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.