திருநெல்வேலி:தென் மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் திருடர்களாக மாறி வரும் அதிர்ச்சிகர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பகல்வேளையில் வீடுபுகுந்து திருட்டுவேலையில் ஈடுபட்டடதற்காக, காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது. பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக தன் கணவருடன் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலரே திருடர்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் கற்குவேல், இவர் கொள்ளையர்களுடன் சேர்ந்து பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் நெல்லை காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பணி ஓய்வில் இருந்த போது காவலர் கற்குவேல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவத்தால் தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பல்வேறு வழக்குகளுக்காக காவல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய சம்பவம் தென் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு வழக்குகளுக்காக கொண்டு வரப்பட்டு கூடங்குளம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவம் அங்கு வாடிக்கையாக நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், கடந்த தீபாவளி அன்று வள்ளியூர் செண்பக ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரது இருசக்கர வாகனத்தை, வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜெகதா விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளார். பின்னர் அந்த வாகனம், கூடங்குளம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்தது
விசாரணை முடிந்து, மதன்ராஜ் தனது இருசக்கர வாகனத்தை வாங்கச் சென்ற போது, அது திருடு போனவிட்டதாக காவலர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பலமுறை கேட்டும் அவருடைய இருசக்கர வாகனத்தை மீட்டுக்கொடுக்காமல், காவலர்கள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மதன்ராஜ் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், இருசக்கர வாகன திருட்டு விவகாரத்தில் கூடங்குளம் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, அதே காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் கிரேஹியா (29) தனது கணவருடன் சேர்ந்து புதிய இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது. கடந்த 10 மாதங்களாக தான் கிரேஸியா கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.