சென்னை பல்லாவரம் அடுத்த வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இவர் ஊரப்பாக்கம் அருகேயுள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பம்மலில் இருந்து பல்லாவரம் செல்வதற்காக அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார்.
பல்லாவரம் ஆடு தொட்டி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, ஆட்டோவிலிருந்த மற்றொரு பெண் சரஸ்வதியின் தாலிச் சங்கிலியை அறுத்ததோடு கீழே தள்ளி விட்டு ஆட்டோவில் தப்ப முயன்றுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து உடனடியாக பல்லாவரம் காவல்துறைக்கு தகவலளித்தனர்.
கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதி 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரஸ்வதியின் நெற்றியில், 7 தையலும், காதில் மூன்று தையலும் போடப்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.