ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம், ஜாக்டியல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பரிசோதனையில் கரோனா உறுதிசெய்யப்பட்டதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று கஞ்சி ரம்பாபு (45), லாவண்யா (40) என்ற தம்பதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து லாவண்யா தனது தாயிடம், தங்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இருவரும் கரீம்நகர் மருத்துவமனைக்கு வருவதாகவும் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
அதன்பின் லாவண்யாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து பார்த்துள்ளனர். வெகு நேரம் ஆகியும் வராததால் மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பின் உள்ளே சென்று பார்க்கையில் இருவரும் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தத் தம்பதி 10 ஆண்டுகள் மகாராஷ்டிராவில் வாழ்ந்துவந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரம்பாபுவின் தந்தை இறுதிச் சடங்குக்காக ஜாக்டியல் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். பின்னர் கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிராவுக்குத் திரும்பிச் செல்லாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செளகார்பேட்டை கொலை வழக்கு - மூன்று பேர் கைது!