சேலம்: நிலத் தகராறு தொடர்பாக அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான காணொலி வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவருக்கும் இவரது சகோதரர் பெரியசாமிக்கும் இடையே சில ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இச்சூழலில், இருவரின் தந்தை முனியகவுண்டர் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தை மகன்கள் இருவருக்கும் தலா இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்துள்ளார்.
இதில் ரத்தினவேல் தனக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட இரண்டு ஏக்கரில் பூ சாகுபடி செய்து விவசாயம் செய்துவருகிறார். இதனிடையே, ரத்தினவேல் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வெளியூர் சென்று விடும் படி, அவரது அண்ணன் பெரியசாமியும், அவரின் குடும்பத்தினரும் ரத்தினவேலுவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
5 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு: போதைக் கும்பல் கைது!
இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது கைகலப்பு ஏற்படுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. இவ்வேளையில், நேற்று முன்தினம் (அக். 14) ரத்தினவேலும், அவரின் மனைவியும் தங்களது விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சகோதரர் பெரியசாமி, அவரது மனைவி, மகன்களுடன் இணைந்து ரத்தினவேலிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில நிமிடங்களில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ரத்தினவேல் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரத்தினவேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார்.
நிலத் தகராறு குறித்த வைரல் காணொலி இந்தச் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சொத்து விவகாரம் தொடர்பாக அண்ணன், தம்பி இருவரிடையே ஏற்பட்ட கைகலப்பு காணொலி தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.