2014ஆம் ஆண்டு, வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வி.ஜி.ராவ் நகர் பகுதியில், கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்டு வாடகைக்கு வீடு கேட்டு விசாரிப்பதுபோல் சென்று, மூதாட்டி ஒருவரைக் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 23 சவரன் தங்க நகைகளையும் செல்போனையும் அடையாளம் தெரியாத நால்வர் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் கணவர் விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காட்பாடி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு, விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (32), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அருள்நாதன் (29), விழுப்புரத்தைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் (24) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.