உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னோவில் இணைய வழி வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக அதிக அளவில் பணப் பரிமாற்றம் செய்த சீனாவைச் சேர்ந்த நபரை, அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் (ஜன. 26) கைது செய்தனர்.
இது தொடர்பாக அந்த மாநில காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றது தொடர்பாக 14 இந்தியர்கள், இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சன் ஜி யிங் என்ற நபர் குறித்து தெரியவந்தது.
சீனாவைச் சேர்ந்த அந்த நபர் இணைய வழி வங்கிக் கணக்குகளுக்கு அதிக அளவில் பணம் பரிமாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. அந்த வங்கிக் கணக்குகள் போலி அடையாள ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி தொடங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
ஹரியானாவில் உள்ள குருகிராமில் தங்கியிருந்த அந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரின் விசா காலாவதியாகியிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க...'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ரகசிய பணப் பரிமாற்றம்' இரண்டு சீனர்கள் கைது!