திருவள்ளூர் அசூதி தெருவில் அமைந்துள்ள கீதாஞ்சலி நகைக்கடையின் உரிமையாளர் மகேந்திரன் (52). இவர் தங்க கட்டிகளை வாங்கி நகையாக தயாரித்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகளுக்கு சப்ளை செய்வது வழக்கம்.
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி திருவள்ளூரில் இருந்து சேகர் என்பவரின் ஆட்டோவில் அவரது மகன் ஆசிப், மற்றும் அவரது உதவியாளர் ராஜ்குமார் ஆகியோருடன் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து விட்டு இறுதியாக சுமார் 300 சவரன் தங்க நகைகளோடு காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவரது ஆட்டோவின் பின்னால் வந்த மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவை வழிமறித்து கத்தி முனையில் மகேந்திரனிடம் இருந்து சுமார் 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான 300 சவரன் தங்க நகைகள் வைத்துள்ள பையை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா உதவியோடு கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.