திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (52). இவரது சகோதரர் சாம்ராஜ். இவர்களுக்கிடையே பல ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலத்தைப் பிரிப்பது சம்பந்தமாக நாளை(நவ.6) பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில், இன்று (நவ.5) பெருமாள் தனது பேரன் சந்துரு(10) உடன் இருசக்கர வாகனத்தில் கொத்தக்கோட்டை அரசு பால் கொள்முதல் நிலையத்திற்கு பால் கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் பெருமாளை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனைப் பார்த்து தடுக்க முயன்ற அவரது 10 வயது பேரன் சந்துருவையும் தலை உள்ளிட்டப் பகுதிகளில், வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த சிறுவன் சந்துருவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், மருத்துவமனையில் சிறுவன் சந்துருவும் உயிரிழந்துள்ளார்.