காஜியாபாத்:இரண்டு நாள்களுக்கு முன்பு காஜியாபாத் மாவட்டத்தில் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பி.டி.ஐ) புகைப்படக் கலைஞர், அவரது வருங்கால மனைவி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முராத்நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள கங்கா கால்வாய் சாலை வழியாக ரவி சௌத்ரியும் அவரது வருங்கால மனைவியும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் அவர்களுடன் வம்பிழுத்து சண்டையிட்டனர்.
இந்நிலையில் புகைப்படக் கலைஞர், அவரது வருங்கால மனைவியை அவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து பிடிஐ புகைப்படக் கலைஞர் புகார் அளித்த நிலையில் உள்ளூர் காவலர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய (எஃப்.ஐ.ஆர்.) மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரவி சௌத்ரி கூறுகையில், “நானும் எனது வருங்கால மனைவியும் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டோம். என் வருங்கால மனைவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தனர்” என்று குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக காவலர் ஒருவர் விவசாயியை லத்தியால் தாக்கும் காட்சியை புகைப்படக் கலைஞர் சௌத்ரி படம் பிடித்திருந்தார். இந்தப் படம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சௌத்ரியை காரில் பின்தொடர்ந்து நால்வர் தாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'உன் மகன் உயிரோடு வேணும்னா ரூ.45 லட்சம் கொடு' - பத்திரிகையாளர் மகனை கடத்தி மிரட்டல்!