தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி மோசடி! - சிண்டிகேட் வங்கி

சென்னை: சிண்டிகேட் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் வரை மோசடி செய்து தங்க நகைக்கடன் பெற்றது அம்பலமாகியுள்ளது.

cheating
cheating

By

Published : Sep 10, 2020, 5:03 PM IST

நந்தனம் அண்ணா சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி, தற்போது கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 101 முறை அந்த வங்கியில் போலி தங்க நகைகளுக்கு கடன் வழங்கி, ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முரளி என்பவர், அண்ணா சாலை சிண்டிகேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தங்க நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர்களாக தனது நண்பர்கள், உறவினர்களையே ஈடுபடுத்தி, அவர்களிடம் கவரிங் நகைகளை கொடுத்து வாடிக்கையாளர் போல் வங்கிக்கு வரவழைத்து, நகைகளை வாங்கி லாக்கரில் வைத்து விடுவார். பின்னர், அதற்கான கடன் பணத்தில் வாடிக்கையாளர்கள் போல் வரும் தனக்கு வேண்டியவர்களுக்கான கமிஷனை வழங்கிவிட்டு, மீதி பணத்தை எடுத்துக் கொள்வார்.

அண்ணா சாலை சிண்டிகேட் வங்கியில் போலி நகைக்கடன் மோசடி

அப்படி ஒருநாள், நகை மதிப்பீட்டாளர் முரளியை சந்திக்க போலி நகையுடன் வந்த நபரை, எதேச்சையாக விசாரித்த வங்கி மேலாளர் பிரவீன் குமார், ஆவணங்கள் போலியாக இருந்ததால் அது குறித்து கேட்டுள்ளார். குட்டு வெளிப்பட்டு பயந்து போன அந்த நபர், அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரவீன் குமார், நகை மதிப்பீட்டாளர் முரளி பொறுப்பில் இருந்த நகைகளை சரிபார்த்த போது தான் இந்த நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

அதன்படி, கவரிங் நகைகளை வைத்து இதுவரை 101 முறை தங்க நகைக்கடன் வழங்கியதும், ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதில், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவரின் மனைவி சாந்தி என்பவருக்கு மட்டும், 37 முறை போலி நகைகளுக்கு கடன் வழங்கி மோசடி நடந்துள்ளது. இதையடுத்து, இம்மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப்பிரிவில், சிண்டிகேட் வங்கி அலுவலர்கள் புகாரளித்தனர். அதன்பேரில், நகை மதிப்பீட்டாளர் முரளி, உடந்தையாக இருந்த சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசோக் நகர் சிண்டிகேட் வங்கியில் கார் கடன் மோசடி

இதே போல், அசோக் நகரில் உள்ள சிண்டிகேட் வங்கி மேலாளர் அனந்த குமார் என்பவர், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது வங்கிக்கிளையில் போலி ஆவணங்கள் மூலம் 8 கார்களுக்கு, சுமார் 60 லட்சம் ரூபாய் வரை மோசடியாக கடன் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவினர், கொடுங்கையுரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் சதீஷ் என்பவர் போலியாக ஆவணங்கள் தயாரித்ததை கண்டறிந்து, கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் ஒருவரையும் அவர்கள் தேடி வருகின்றனர். மேலும், இந்த மோசடியில் வங்கி அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details