சென்னை மண்ணடி பகுதியில் ஆட்டோவில் ஹவாலா கும்பல் வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக வடக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் மண்ணடி ராஜாஜி சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது மண்ணடி ராஜாஜி சாலை வழியாக வந்த ஆட்டோவை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தனர். மேலும் அந்த ஆட்டோவில் பயணித்த இரண்டு பேரிடம் இருந்த பைகளை வாங்கி சோதனை செய்ததில் அதில் ரூ. 59, 20, 659 மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணை செய்ததில், இவர்கள் கேரளாவை சேர்ந்த முகமத் அர்ஷத், முகமது ஜியாத் என தெரியவந்துள்ளது. மேலும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து ரயில் மூலம் பணத்தை கொண்டு வந்து மண்ணடி தம்பு செட்டி தெருவில் மெட்ரோ பேலஸ் கடை உரிமையாளரான ஜமால் சாதிக் என்பவரிடம் கொடுக்க வந்ததாக தெரியவந்துள்ளது.