சென்னை: ரூ.80 லட்சம் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவக்குமார் என்பவர் மடிப்பாக்கம் ராம் நகர் 27ஆவது பிரதான சாலையில் 4,800 சதுர அடி கொண்ட இடத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு ராம் நிக்கால் பயாணி, ஸ்ரீ சாந்திலால் பயாணி, ஸ்ரீ பிரதீப்குமார் பயாணி ஆகியோர்களிடமிருந்து வாங்கி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெற்று வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் சிவகுமார் அந்த இடத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு சென்று பார்த்தபோது அவரின் இடத்தில் வேறு ஒருவர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது சிவகுமார் பெயரில் வேறொரு நபர் ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆதார் கார்டு, போலியான பட்டா பெற்று சரவணகுமார் ஆதிலிங்கம் என்ற பெயரில் வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .
போலி ஆவணங்கள் மூலம் சரவணக்குமார் ஆதிலிங்கம் அந்த இடத்தை வெங்கடேஸ்வர பிரசாத் என்பவருக்கு ரூ.80 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.