சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோவதாக, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து, இப்புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் நேற்று, புளியந்தோப்பு அருகே, குற்றப்பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையில் அவர்கள் இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது . அவர்கள் புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாயப்பு(21), ராஜதோட்டம் பகுதியைச் சேர்ந்த கவி(25) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த 2 வாகனங்களும், ஆத்தூர் கோட்டை பகுதியில் திருடப்பட்டது என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களால் திருடப்பட்ட சுமார் 4 இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.