கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புகாரி (43). இவர் கட்டடங்கள் உடைக்கும் வேலை செய்துவந்தார். அவ்வாறு கட்டடங்களை உடைக்கும்போது கிடைக்கும் கம்பி, மரம் உள்ளிட்ட பொருள்களை விற்பனைசெய்தும் இவர் சம்பாதித்துவந்தார்.
இந்நிலையில், அயனாவரம் அக்ரகாரம் தெருவில் உள்ள ஒரு பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் புகாரி, சம்பந்தமூர்த்தி (20), செந்தில் (37) ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். அப்போது கட்டடக் கழிவாக செம்மரக்கட்டைகள் கிடைத்துள்ளன.
அதனைக் கொண்டுசென்று விற்ற புகாரி, அதன்மூலம் கிடைத்த பணத்தை பெரம்பூர் நெடுஞ்சாலைக்குச் சென்று மற்ற இருவருடனும் பங்கு பிரித்துள்ளார். அதில் புகாரி அதிக பணம் எடுத்துக்கொண்டதாகக்கூறி அவருடன் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் புகாரியை இருவரும் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பணம் பங்கிடுவதில் தகராறு - கல்லால் அடித்து ஒருவர் கொலை இந்நிகழ்வு தொடர்பாக ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், சொந்த ஊருக்குத் தப்பிச் செல்ல முயன்ற, சம்பந்தமூர்த்தி, செந்தில் ஆகிய இருவரையும் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் வைத்து, காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது திராவகம் வீசிய காதலி!