தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிக்கிய இரிடியம் உண்மையானதா? - எஸ்பி அளித்த தகவல்கள் - iridium scam

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓவிலிருந்து மாயமாகி, தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெவித்துள்ளார்.

tuticorin sp shared about trapped iridium
tuticorin sp shared about trapped iridium

By

Published : Sep 28, 2020, 11:30 AM IST

தூத்துக்குடி: இரிடியம் கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓவிலிருந்து மாயமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தூத்துக்குடியில் நேற்று (செப். 27) மீட்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், “தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (செப். 27) மாலை மாவட்ட காவல் துறையினரை தொடர்புகொண்டு, அரியவகை தனிமமான இரிடியத்தை விற்று தரக்கோரி மோசடி கும்பல் கேட்பதாகவும், அவர்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் ரகசிய தகவல் அளித்தார்.

அவரளித்த தகவலின்பேரில் சிப்காட் காவல் நிலைய காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வட்டகோவில் அருகே நின்று கொண்டிருந்த இன்னோவா காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அரியவகை தனிமமான இரிடியத்தை விற்க தூத்துக்குடி வந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்த காரைக்குடியைச் சேர்ந்த வைத்திலிங்கம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கம், மரியதாஸ் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரிடியம் என சொல்லக்கூடிய தனிமம் அடங்கிய பெட்டி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஆறு குப்பிகளில் இரிடியம் உள்ளதாக தெரிந்தது.

இதுதவிர அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரிடமிருந்து இரிடியத்தை வாங்கியதாக கூறுகின்றனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்.

சிக்கிய இரிடியம் உண்மையானதா? - எஸ்பி அளித்த தகவல்கள்

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட குப்பிகளில் உள்ளவை இரிடியம்தானா என்பது குறித்த உண்மை தன்மையை அறிய அதனை ஆய்வு கூடத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சர்வதேச சந்தையில் இரிடியத்தின் மதிப்பு பல கோடி ரூபாய்என சொல்லப்படுகிறது. எனவே பரிசோதனைக்கு பின்னரே அது இரிடியம்தானா? என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இது போன்ற மோசடி கும்பல்கள், கோயில் கலசங்கள் இருப்பதாகவும், ரைஸ் புல்லிங் செய்வதாகவும், வாஸ்து சரி செய்வதாகவும் மக்களை ஏமாற்றி வருவதை நாம் அறிவோம். எனவே மக்கள் இது மாதிரியான மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்றார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் முத்துராமலிங்கம் என்பவர், முதுகுளத்தூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details