சேலம் அழகாபுரம் மற்றும் ஐந்து ரோடு, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தவறவிட்ட, திருடுபோன செல்ஃபோன்களை கண்டுபிடித்துத் தருமாறு பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமாரிடம் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த புகாரை விசாரணை செய்யுமாறு சேலம் அழகாபுரம் காவல் நிலைய காவல் காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி ஆணையர் பூபதி ராஜன், ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தவறவிட்ட, திருட்டுப் போன 20 செல்ஃபோன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். திருடர்கள் செல்ஃபோனை திருடிவிட்டு அதைக் குறைந்த விலைக்கு விற்று உள்ளார்கள், ’குறைவான விலையில் செல்ஃபோன் கிடைப்பதால் வாங்கினோம். ஆனால் இந்த திருடர்கள் யார் என்று தெரியவில்லை’ என்றும் செல்போன் வாங்கியவர்கள் கூறியுள்ளனர். மேலும் ’தங்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாதீர்கள் என்றும் தெரிவித்து செல்ஃபோனை திருப்பிக் கொடுத்து உள்ளனர்’ என தனிப்படை காவல் துறையினர் கூறினர்.