தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இளைஞரைக் கடத்தி மிரட்டிய விவகாரம் - பெண் ஆய்வாளர் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம்! - Teenager Threatening Issue

குமரி: இளைஞரைக் கடத்தி மிரட்டிய விவகாரத்தில் பெண் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

three police suspended in kanniyakumari

By

Published : Oct 17, 2019, 10:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்லின்(24). இவர் ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், சமீபத்தில் இரு கார்கள், ஒரு ஜே.சி.பி. இயந்திரத்தை ஜெர்லின் சொந்தமாக வாங்கியுள்ளார். ஜெர்லினிடம் திடீரென பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால், ஜெர்லினுக்கு புதையல் கிடைத்துள்ளதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், ஜெர்லினிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஜெர்லினை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்திற்கு கடத்திச் சென்று, தங்கப் புதையலில் தங்களுக்கு பங்கு வேண்டும் என அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மேலும், ஜெர்லினிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டும், அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளையும் பறித்து கொண்டும் விரட்டியுள்ளனர். இது குறித்து காவல் துறையினரிடம் ஜெர்லின் புகார் அளித்தார்.

புகாரையடுத்து, குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விசாரணை மேற்கொண்டார். அதில், புதையலில் பங்கு கேட்டு ஜெர்லினை கடத்தி சித்ரவதை செய்ததாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார், ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய மூன்று பேர் அதிரடியாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் பொன்தேவி, தலைமைக் காவலர் ஜெரோன்ஜோன்ஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபன் ஜெபதிலக் ஆகியோருக்கு இதில் தொடர்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஜெர்லின் கடத்தி வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டிற்கு ஆய்வாளர் பொன்தேவி சென்று வந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

பெண் ஆய்வாளருடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள்

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த செல்ஃபோனில் பொன்தேவி அடிக்கடி பேசியது தெரிய வந்தது. புதையல் வதந்தி விவகாரத்தில் ஜெர்லினிடம் பங்குகேட்டு பொன்தேவி மிரட்டியிருப்பது காவல் துறையினர் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து,திருநெல்வேலி காவல்துறை துணை ஆய்வாளர் பிரவின்குமார் அபினவ், பொன்தேவியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான, உத்தரவை தூத்துக்குடியில் உள்ள பொன்தேவியின் வீட்டில் காவல் துறையினர் ஒட்டியுள்ளனர். இதேபோல், தலைமைக் காவலர் ரூபன் ஜெயதிலக், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெரோன்ஜோன்ஸ் ஆகியோர் இப்புகார் எழுந்தவுடனே சோதனைச் சாவடி பணிக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்களையும் தற்போது பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டார். மேலும், ஆய்வாளர் பொன்தேவி, இரு தலைமைக் காவலர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:போலீஸ் என்று கூறி முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details