சவுகார்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி தலில்சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கிய யானைகவுனி காவல்துறையினர், பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் குடும்பப் பிரச்சனை காரணமாக, ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர்கள் உட்பட 6 பேர் இணைந்து மூவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து புனேவில் பதுங்கி இருந்த குற்றவாளிகளான ஜெயமாலாவின் சகோதரர் கைலாஸ், விஜய் உத்தம், ரவீந்திரநாத் கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் கொலை செய்ய பயன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விகாஷ், ராஜீவ் ஷிண்டே ஆகியோரை பிடிக்க தனிப்படையினர் மகாராஷ்டிராவிற்கு சென்று தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக வெளிநாட்டிற்கு தப்பி செல்லாத வகையில் வடமாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு மூவரின் புகைப்படங்களை அனுப்பியும், அவர்களது செல்போன் எண்ணை டிராக் செய்தும் வந்தனர். அதோடு அவர்களது வங்கி கணக்கை வைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழக காவல்துறை அனுப்பிய புகைப்படங்களை வைத்து டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், ஜெயமாலா, விகாஸ் மற்றும் ராஜீவ் ஷிண்டே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதையடுத்து மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ள சென்னை தனிப்படையினர் டெல்லிக்கு விரைந்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெட்ரோல் நிலைய ஊழியர் தலையில் கல்லை போட்டு கொன்ற கும்பல்!