தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் தொடர் கொலைகள், குற்றச் சம்பவங்கள் குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகிய 11 கொலை வழக்குகள் தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ள நான்கு கொலைகள் தொடர்பாக 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ள மூன்று கொலை வழக்குகள் தொடர்பாக 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுமக்களிடம் அவசர உதவி அழைப்பு எண் 100 பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாததும் பெருகும் குற்றங்களுக்குக் காரணமாக உள்ளது. ஆகையால் குற்றச் சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் என்று பொதுமக்கள் உணர்கையில் அவசர எண் 100-யும் "காவலன் செல்ஃபோன் செயலி"யையும் பயன்படுத்தி காவல் துறையினருக்கு தகவல் அளித்தால் பல குற்றங்களைத் தடுக்கலாம்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 200 வாகனங்களில் காவல் துறையினர் இரவு-பகலாக ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.