தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உட்பட 400 வழக்குகள் திருவாரூர் முருகன் என்பவர், அவரது கூட்டாளிகள் மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த வருடம் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையை துளையிட்டு சுமார் 28 கிலோ நகை வரை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர் பெங்களூரு காவல் நிலையத்தில் திருவாரூர் முருகன் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததால், பெங்களூரு காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த திருடுபோன நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் திருச்சி ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக திருச்சி காவல் துறையினர் காவலில் எடுத்து சில நாட்கள் விசாரித்தனர்.