தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2021, 8:12 AM IST

ETV Bharat / jagte-raho

மண உறவைத் தாண்டிய காதலாக மாறிய செல்போன் உரையாடல்: ஆசிரியருக்கு நடந்த கொடூரம்!

திருமணத்திற்கு மீறிய தொடர்பைக் கொண்டிருந்த பள்ளி ஆசிரியரை, உறவுகொண்டிருந்த பெண்ணின் கணவர் கூலிப்படையை ஏவி கொலைசெய்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் கணவர் உள்பட கூலிப்படையைச் சேர்ந்த எட்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Thirupathur murder accused arrest
Thirupathur murder accused arrest

திருப்பத்தூர்: மண உறவைத் தாண்டிய காதலின் காரணமாக, பள்ளி ஆசிரியரின் தலையில் வாகனத்தை ஏற்றி கொலைசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனவரி 29ஆம் தேதி மாலை நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அருகிலுள்ள நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

தனிப்படை விசாரணை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், வாணியம்பாடி காவல் துணைகண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான 3 தனிப்படை பிரிவு அமைக்கப்பட்டு கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஊத்தங்கரை ஜோதி நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் அடுத்த கங்காவரம் பகுதியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி சிவக்குமார் (38) தான் கொலைசெய்யப்பட்ட நபர் என்பது தெரியவந்தது. இவருக்குத் திருமணமாகி விக்டோரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளதும், மனைவி போச்சம்பள்ளி பகுதியில் கணினி மையம் வைத்து நடத்திவருவதும் தெரியவந்தது.

மனைவி அளித்த தகவல்கள்

இச்சூழலில், காவல் துறையினர் விக்டோரியாவிடம் விசாரணை மேற்கொண்டதில், சிவக்குமார் அவ்வப்போது தனிமையில் பல மணிநேரம் கைப்பேசியில் ரகசியமாகப் பேசிக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்தார். இதனால் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல் துறை, சிவக்குமாரின் தொடர்பு எண்ணைக் கொண்டு, அவர் அதிக நேரம் பேசும் எண்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மண உறவைத் தாண்டிய காதல்

அதாவது, கொலைசெய்யப்பட்டவர் பணிபுரியும் அதே பள்ளியில், ஆசிரியையாக ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் பணியாற்றியுள்ளார். ஒரு வருட காலமாக இந்தப் பெண்ணுடன் சிவகுமாருக்கு மண உறவைத் தாண்டிய காதல் இருந்தது தெரியவந்தது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த லட்சுமியின் கணவர் இளங்கோ, சிவக்குமாரைப் பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் அடிக்கடித் தனிமையில் தனியறையில் சந்தித்துவந்துள்ளனர்.

இதனால் கோபத்தின் உச்சத்திலிருந்த இளங்கோ, ஊத்தங்கரை பகுதியில் வசித்துவரும் ரவுடி வெள்ளைச்சாமி (35) என்பவரைச் சந்தித்து ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து, ஆசிரியர் சிவக்குமார் என்பவரின் கைகளை உடைத்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொலை அரங்கேற்றம்

சம்பவத்தன்று வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் சிவக்குமாரைப் பின்தொடர்ந்த கூலிப்படையினர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிவக்குமாரை வழிமறித்து வாடகைக்கு எடுத்துவரப்பட்ட ஸ்கார்பியோ காரில் கடத்தியுள்ளனர். உடன் கொண்டு ன்ற கனரக வாகனத்தில், ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட ஆசிரியர்

செல்லும் வழியிலேயே சிவக்குமாரை கூலிப்படையினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், அங்கேயே இறந்துள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கூலிப்படையினர், உடலை எங்கு வீசுவது என்று தெரியாமல் வாகனத்தில் வைத்து வலம்வந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி வரை சென்று மீண்டும் நாட்றம்பள்ளி நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது பங்களாமேடு பகுதியில் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாததைக் கண்டு அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு சிவக்குமாரின் உடலை வீசியுள்ளனர். அவர் உடலில் அப்போது சிறிய அசைவுகள் இருப்பதை உணர்ந்த கொலையாளிகள், வாகனத்தைக் கொண்டு முகத்தில் ஏற்றிச் சிதைத்துள்ளனர்.

கார் டயரில் தலை சரியாக நசுங்காததால், மீண்டும் கனரக வாகனமான ஈச்சர் லாரியைக் கொண்டு தலையில் ஏற்றி நசுக்கி படுகொலை செய்துவிட்டு, ஆசிரியரின் இருசக்கர வாகன நம்பர் பிளேட்டில் சாணம் பூசி ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று வீசியுள்ளனர்.

சிக்கிய கொலையாளிகள்

பிடிப்பட்ட கொலையாளிகள்

இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஊத்தங்கரை பாரதிபுரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த சந்திரபோஸ், அதே பகுதியைச் சேர்ந்தவர்களான ஹரிஹரன் (27), கணேசன் (35), அறிவழகன் (31), ஊத்தங்கரை வண்டிக்காரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (30), இளங்கோ (27), ஊத்தங்கரை சின்னராம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோ (27), ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மியின் கணவரும் முதல் குற்றவாளியுமான இளங்கோ (42) ஆகிய 8 பேரையும் அதிரடியாகக் கைதுசெய்த காவல் துறையினர், கொலைசெய்ய அவர்கள் பயன்படுத்திய இலகு ரக வாகனம் ஸ்கார்பியோ, கனரக வாகனம் ஈச்சர் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆசிரியர் சிவக்குமார் கொலைசெய்யப்பட்ட இரண்டு நாள்களுக்குள்ளாகவே, காவல் துறை 3 தனிப்படை அமைத்து கொலைகாரர்களைக் கண்டுபிடித்துக் கைதுசெய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details