சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சங்கிலிப் பறிப்பு, கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து துணை ஆணையர் முத்துசாமி உத்தரவின் பேரில் தனிப்படைக் காவல் துறையினர் 10 நாட்களாக பிகார், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில காவல் துறையினரிடம் தகவல் சேகரித்தனர்.
தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்திய காவல் துறையினர் சுமார் 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் வரை கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளிலும் சோதனை செய்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று, அண்ணா நகர் திருமங்கலம் சாலையில் வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டபோது ஒருவர் சிக்கிக்கொண்டார்.
அவரை விசாரித்ததில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அமோல் பாலா சாகிப் ஷிண்டே (29) எனத் தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஹைதராபாத்தில் திருடிவிட்டு சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, ஆந்திரப் பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் சென்னை வந்து பல்வேறு இடங்களில் கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.