தூத்துக்குடி:கயத்தாறு அருகே ஆதிக்க சாதியினரால் காலில் விழவைக்கப்பட்டு சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பால்ராஜ் (60) நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தார்.
அவர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, நான் கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்ட ஓலைக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன். எனக்கு சொந்தமாக, 90 செம்மறி ஆடுகளும், 10 வெள்ளாடுகளும் உள்ளன.
கடந்த 8ஆம் தேதி மாலை ஓலைக்குளம் கிராமத்துக்கு அருகேயுள்ள, திருமங்களகுறிச்சி குளத்தின் நடுவில் நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அதே இடத்தில், அருகிலேயே ஓலைக் குளத்தை சேர்ந்த ஆதிக்க சாதிக்காரரான சிவசங்கு என்பவரும் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எனது ஆட்டு மந்தையிலிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று சிவசங்கு ஆட்டுக்கூட்டத்தில் சென்று மேய்ந்தது. அந்த ஆட்டுக்குட்டியைப் பிடிக்கச் சென்ற என்னை சிவசங்கு "என்ன திமிர் இருந்தால் என் ஆடுகளுடன் உன் ஆட்டுக் குட்டியை மேய விடுவாய்" என என் சாதியைச் சொல்லித் திட்டி, அடிக்க வந்தார்.
நான் என்னை ஏன் திட்டுகிறீகள் என சத்தம் போட்டேன். உடனே சிவசங்கு ஊருக்குள் இருந்து அவருடைய உறவினர்களான பெரியமாரி, வீரைய்யா, பெரியமாரியின் மகன் மகேந்திரன், சிவசங்கின் மகன் சங்கிலி பாண்டி, மகள் உடையம்மாள், சங்கிலி பாண்டியின் மகன் மகாராஜன் உள்ளிட்ட ஆறு பேரை அழைத்து வந்து என்னைத் தாக்கினார்.
வந்தவர்கள் அனைவரும் என் சாதியைச் சொல்லித் திட்டி, சிவசங்கின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் விழ மறுத்தால் அங்கேயே கழுத்தை அறுத்து கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தனர். பயந்துபோன நான் அவர்களின் கட்டாயத்தின் பேரில் பல முறை சிவசங்கின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன்.