திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஏ.பி.புதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (66). இவரது மனைவி ஈஸ்வரி (60). இவர்களது மகன் உதயகுமார். திருமணமாகி பல்லடத்தில் மனைவியுடன் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆறுமுகம், வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
உதயகுமாருக்கு திருமணம் நடந்து பல நாள்கள் கடந்தும் குழந்தை இல்லை. இதனால் ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதி மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டி பரிகார பூஜை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில், வெள்ளகோவிலில் ஆட்டோ ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் பரிகார பூஜை செய்வதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து டிசம்பர் 29ஆம் தேதி இரவு ஏ.பி.புதூரில் உள்ள தங்களது வீட்டில் ஆறுமுகம் -ஈஸ்வரி தம்பதி பரிகார பூஜையை நடத்தினர். அதேபோன்று டிச.30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவர்களது பர்னிச்சர் கடையில் பூஜை நடத்த திட்டமிட்டனர். ஆனால், அன்று காலை பர்னிச்சர் கடையில் ஆறுமுகம் கொடூரமாக தாக்கப்பட்டும், ஈஸ்வரி அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈஸ்வரி அணிந்திருந்த 5 சவரன் தாலிக்கொடி மற்றும் பர்னிச்சர் கடையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பரிகார பூஜை விஷயம் தெரிய வந்தது. தலைமறைவான சக்திவேலை காவல்துறையினர் தேடி வந்தனர். நேற்றிரவு (டிச.31) மதுரையில் காவல்துறையினர் சக்திவேலை கைது செய்தனர்.
விசாரணையில், பர்னிச்சர் கடைக்கு அடிக்கடி வந்து செல்வதில் ஆறுமுகத்துடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்ப விஷயங்கள் குறித்து ஆறுமுகம் சக்திவேலிடம் தெரிவித்தார். குழந்தை பிறக்க பரிகார பூஜையை தானே செய்வதாக சக்திவேல் கூறினார். தொடர்ந்து டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை பரிகார பூஜை செய்வது போல் நடித்து, எதிர்பாராத நேரத்தில் ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரியை தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், சக்திவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சாலைப் பணியாளர் மீது காரை விட்டு ஏற்றிய நபர் கைது - வைரல் காணொலி