கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பொரசப்பட்டு பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் செல்வராஜ் (35). இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், ஜனனி (13), கனிமொழி (12), கனிஷ்கா(10), ஹரினி (8) மெளலிஸ்வரன்(6) என்ற குழந்தைகளும் உள்ளனர்
மூன்று வருடங்களுக்கு முன்பு செல்வராஜ் வெளிநாடு சென்றிருந்தார். அங்கு வேலை செய்து செல்வராஜ் அனுப்பிய பணத்தை அவரது மனைவி புவனேஸ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், வேட்டலம் பகுதியில் ஒரு பெண்ணிற்கும் கொடுத்திருந்தார். பணத்தை பெற்றுக் கொண்ட பெண்கள் அதனைத் தராததால், புவனேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்த செல்வராஜ், தனது மனைவி பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, அவர்கள் யாரும் போன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது காதல் மனைவி இறந்து போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் செல்வராஜ் தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த 31ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் செல்வராஜின் உறவினர்கள், பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், 5 குழந்தைகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதையும் படிங்க:ஒட்டன்சத்திரத்தில் காதலி கொலை...! காதலன் உள்பட இருவர் கைது...!