மயிலாடுதுறை: சீர்காழி அருகே சிறுவர்கள் கஞ்சா இழுக்கும் காணொலி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழு பேர் கூட்டாக ஒன்று சேர்ந்து, காட்டுப் பகுதியில் அதிகளவில் கஞ்சா பொட்டலங்களை வைத்து, அதனை சிகரட்டில் வைத்து இழுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
சீர்காழி தாலுகாவில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் பள்ளி, கல்லூரி பயிலும் சிறுவர்கள் வாழ்க்கை வீணாகிவருகிறது. தற்போது கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் கூட்டாக ஒன்றுசேர்ந்து மது, கஞ்சா உள்ளிட்ட தீய பழக்கங்களில் ஈடுபட்டு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் மேலும், அதன் மூலமாக வருமானம் ஈட்டி, போதை பொருள்களை வாங்குகின்றனர். கடந்த வாரம் இரண்டு சிறுவர்கள் கஞ்சாவிற்காக கோயிலில் உண்டியலை உடைத்தும், சாமி கழுத்திலிருந்த தாலியைத் திருடியும் கஞ்சா வாங்குவது போன்ற காணொலி இணையத்தில் உலாவியது. இச்சூழலில், தற்போது மற்றொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதனை முழுமையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்தி சிறுவர்களின் வாழ்வை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சமுக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.