சென்னை: பல்பொருள் அங்காடியில் தாய், மகள் சேர்ந்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மேடவாக்கம் பிரதான சாலை, மடிப்பாக்கத்தில், பாதாள விநாயகர் கோயில் அருகிலுள்ளது சங்கிலி தொடர் பெரும் வணிக பல்பொருள் அங்காடியான மோர் சூப்பர் மார்கெட். அங்கு பொருள்கள் வாங்குவதுபோல் வந்த இரண்டு பெண்கள், தங்களது பாவாடைக்குள் முந்திரி, பாதாம் போன்றவற்றைத் திருடி பதுக்கிக்கொண்டனர்.
இதனைக் கண்ட கடையின் ஊழியர்கள் இரண்டு பெண்களையும் பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தாய்-மகள் நாகஜோதி (60)-பேச்சியம்மாள் (35) என்பதும், தொடர்ந்து கடையில் இருந்து முந்திரி, பாதாம் திருடி வந்ததும் தெரியவந்தது. இதுவரை 11,500 ரூபாய் மதிப்பிலான முந்திரி, பாதமை திருடியுள்ளதாக காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டனர்.
கடையில் பெண்கள் திருடும் சிசிடிவி பதிவு கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளோடு கடை ஊழியர் பாபு அளித்த புகாரின்பேரில் பழவந்தாங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு சிறையிலடைத்தனர்.