தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த அஸ்தகிரியூா் பகுதியை சோ்ந்த மாதன் மகன் முனியப்பன். இவா், பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடத்தூா் பகுதியில் கரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், முனியப்பன் நேற்று இரவு வியபாரத்தை முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் அஸ்தகிரியூருக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே காரில் வந்திருந்த 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், அந்த கும்பல் முனியப்பனை காரில் கடத்தி சென்று பலமாக தாக்கி இறக்கிவிட்டுச் சென்றுள்ளனா். படுகாயங்களுடன் வீட்டிற்கு சென்ற முனியப்பன், தனது குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு படுக்கைக்கு சென்ற சிறிது நேரத்தில் இறந்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் கடத்தூா் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனா். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நான்கு பேர் மீது சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் தெரிவித்தனா்.
காவல்துறையினா் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்ததால், முனியப்பனின் உறவினா்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அரூா் துணை காவல் கண்காணிப்பாளா் தமிழ்மணி, சம்பந்தபட்டவா்களை உடனடியாக கைது செய்வதாக அளித்த வாக்குறுதியை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மைலன் ஏரி: விவசாயிகள் பூஜை