தி நகர் சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்த நூரில் ஹக் (71), தனது மனைவி ஆயிஷா மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர்களோடு ஆயிஷாவின் உறவினர்களான முஸ்தபா, மொய்தீன் உள்ளிட்ட 8 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி மாலை நூரில் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று, அரிவாளை காட்டி மிரட்டி நூரில் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த சுமார் 250 சவரன் நகைகள், 1 லட்ச ரூபாய் பணம், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளது. மேலும், வீட்டு வாசலில் நின்றிருந்த ஹோண்டா சிட்டி காருடன், நூரில் உறவினர்களான முஸ்தபா மற்றும் மொய்தீன் ஆகியோரையும் அந்த கொள்ளைக்கும்பல் கடத்திச் சென்றுள்ளது. பின்னர் தி.நகரில் உள்ள தனியார் துணிக்கடை வாசல் முன்பு முஸ்தபாவை மட்டும் இறக்கிவிட்ட அக்கும்பல், மொய்தீனுடன் தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து நூரில் ஹக் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொள்ளை தொடர்பாக நூரில் ஹக்கிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உறவினரான மொய்தீன் தொழில் தொடங்குவதற்காக தன்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டதாகவும், அதற்கு பணமில்லை என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.