சென்னை:தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து 20 கிலோ போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னை வால்-டாக்ஸ் சாலையில் இயங்கி வரும் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் வெளியூர்களுக்குப் போதைப் பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரி பார்த்தீபன் தலைமையிலான அலுவலர்கள், நேற்றிரவு (செப்.28) ஒன்பது மணியளவில் அந்தத் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அட்டை பெட்டிகளில் இருந்த 20 கிலோ எடைக் கொண்ட பார்சலை பிரித்து பார்த்தபோது, உள்ளே போதைப்பொருள்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அலுவலர்கள், தி.நகரிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.