குரோம்பேட்டை கணபதிபுரம் நாகாத்தம்மன் கோயில் தெருவில் வீரபாண்டி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர்.
அந்த வீட்டில் சந்தேகப்படும்படியாக இளைஞர்கள் வந்து செல்வதாகவும், போதை மருந்து போல ஒருவித வாசனை வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் சிட்லபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் அங்கு சென்ற காவலர்கள், அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது, சுமார் மூன்று கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டெடுத்த காவலர்கள், அதனை பறிமுதல் செய்ததோடு அங்குத் தங்கியிருந்த கடலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த யஸ்வந்த் ராஜா (25), ஸ்ரீநாத் (22), விக்னேஷ் (22), சதீஷ்குமார் (22), கௌதம் (22), அரவிந்த் (26) என ஆறு பேரை கைது செய்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கல்லூரி மாணவர் என்றும், அவர்கள் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் சிபிஐ சோதனை