தருமபுரி:அரூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (டிச.16) தனது கணவருடன் வந்து, தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பாலியல் புகார்
அப்புகாரில், தருமபுரி அடுத்துள்ள நூலஅள்ளி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், தனது அலைபேசியில் தொடர்புகொண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என அழைப்பைத் துண்டித்த பிறகும், மீண்டும் மீண்டும் தொடா்புகொண்டும், வாட்ஸ் அப்பில் ஆபாசமாக தகவல் அனுப்பியும், தொல்லை கொடுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இருவர் கைது
புகாரின் அடிப்படையில் தருமபுரி நகர காவல் துறையினர், ரவி மற்றும் அவருடைய நண்பர் நரசிம்மன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து வாட்ஸ் ஆப், முகநூலிலிருந்து தருமபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது முதலில் நரசிம்மன் பேசுவார் என்றும், அந்த பெண்கள் ஒத்துவரவில்லை என்றால் அடுத்ததாக ரவி அவர்களைத் தொடா்புகொண்டு பேசியது தெரியவந்துள்ளது. இதேபோல் இருவரும் பல பெண்களுக்கு அலைபேசியில் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது