சென்னை எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் (36). இவர் நேற்று இரவு பணப் பரிமாற்ற அலுவலகத்திலிருந்து சுமார் 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தனது முதலாளியான முகமது அனீஸ் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் முகமது அபுபக்கரைப் பின்தொடர்ந்து வந்த 7 மர்ம நபர்கள் திடீரென இருவரையும் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு பணத்தைப் பறித்துச் சென்றனர். இந்நிகழ்வு தொடர்பாக வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் முகமது அபுபக்கர் புகாரளித்தார்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகே ஜூஸ் கடை நடத்தி வரும் தர்மதுரை என்பவர், இரவு தன் கடையை மூடிவிட்டு செல்லும் போது ஐசிஐசிஐ வங்கி அருகே பணப்பை இருந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், முகமது அபுபக்கரை வரவழைத்து அந்தப் பையை திறந்து பார்க்கும்போது அதில் 8 லட்சம் இருந்தது. மேலும், சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் தர்ம துரையை விசாரித்ததில் தனது வீட்டில் 7 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். மீதி பணத்தை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார்.
அதனடிப்படையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சதீஷ் குமார், லோகேஷ், சுகுமார் ஆகியோரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கும்பல்தான் வழிப்பறியில் ஈடுபட்டதா அல்லது பையில் இருந்த பணத்தை மட்டும் திருடிச் சென்றனரா என்னும் கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வடக்குக் கடற்கரை காவல் நிலையம் இதையும் படிங்க: பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!