சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மளிகை கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அடையார் துணை ஆணையர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் செம்மஞ்சேரி உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர், அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது.
இது குறித்து கடையின் உரிமையாளர் சோகன்லால்(38) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் தாழம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ்(38) என்பவர் தனக்கு சப்ளை செய்வதை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து ஜெயராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சோகன்லால் மற்றும் ஜெயராஜ் பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சென்னை சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதியில் அவர் தீப்பெட்டி நிறுவனம் நடத்தி வருவதும், தீப்பெட்டிகள் ஏற்றுவது போல் புகையிலை பொருட்களையும் பெங்களூரில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 400 கிலோ புகையிலை பொருட்களையும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கையில் ஆயுதங்களுடன் அரை நிர்வாணத்துடன் உலா வந்த அடையாளம் தெரியாத நபர்கள் - பொது மக்கள் அச்சம்