சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் ஆரோக்கியமேரி(30). இவர் ஆன்லைன் மூலமாக பான் கார்டு, ஆதார் கார்டு அப்ளை செய்து கொடுக்கும் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெருமாள் பேட்டையைச் சேர்ந்த ராஜ் பரத் (35) என்பவர் அவரது உறவினருக்கு பான் கார்டு அப்ளை செய்ய வந்துள்ளார்.
அப்போது ஜெனிபருக்கும் ராஜ் பரத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜ் பரத் வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு வங்கியில் அலுவலர்களை தெரியும் என்றும் ஜெனிஃபரிடம் கூறியுள்ளார். மேலும், ஜெனிஃபருக்கு வங்கியில் கட்டாயமாக பணி வாங்கி தருவதாகவும் அதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகும் என ராஜ் பரத் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெனிஃபர் தனது தோழியான பரிமளா, ரேவதி ஆகியோருக்கும் வங்கியில் வேலை வேண்டுமென கூறி மொத்தம் 23 லட்ச ரூபாயை ராஜ் பரத்திடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து சில மாதங்கள் கடந்த நிலையில், ராஜ் பரத் வங்கியில் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெனிஃபர் ராஜ் பரத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பதில் பேச மறுத்துள்ளார்.