சென்னை ஆவடி,புதுநகர், 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் சேகர் (45). கட்டட மேஸ்திரியான சேகர், தனது வீட்டிலிருந்து காமராஜர் நகர், பள்ளிக்கூடத் தெரு வழியாக கடைக்குச் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக தாக்கினர். பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டிலிருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
பணத்தை பறிகொடுத்த சேகர் உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வழிப்பறி செய்தவர்கள் ஆவடி, காமராஜ் நகர் வரதராஜன் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் லட்சுமணன் (32), மணிகண்டன் (30), தினேஷ் (26) ஆகியோர் எனத் தெரியவந்தது.