சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை அருகேயுள்ள காக்ஸ் காலனியில் மாநகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் 500 கிலோ எடைகொண்ட கெட்டுப்போன மாட்டிறைச்சி, குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து பறிமுதல்செய்தனர்.
பறிமுதல்செய்த மாட்டிறைச்சி கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் எரிக்கப்படும் எனத் தெரிவித்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், அங்கு இருக்கக்கூடிய கடைகளையும் சீல்வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டை சந்தையிலிருந்து ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மீன்கள், இறைச்சிகள் அனுப்பப்படுகின்றன. அவை கெடாமல் இருப்பதற்காக ரசாயனம் கலக்கப்படுவதாகத் தகவல் வந்ததையடுத்து அலுவலர்கள் இந்தச் சோதனையை நடத்தியுள்ளனர். மேலும் பறிமுதல்செய்த இறைச்சியை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்தபின், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த வாரம் இச்சந்தையில் ரசாயன பொருள்களைப் பயன்படுத்தி பழைய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனை நடைபெற்றது. இதேபோன்று மதுரையிலும் அரை டன் ஆட்டிறைச்சியில் கெட்டுப்போன இறைச்சி கலக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின்பேரில் சோதனை நடத்தப்பட்டு, கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலூரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - ஏழு பேரை தேடும் பணி தீவிரம்