சென்னை: தியாகராய நகர் சாரதாம்பாள் தெருவில் வசித்துவருபவர் முதியவர் நூருள் யாகூப்(71). இவரையும் இவர் மனைவியையும் கட்டிப்போட்டு 250 சவரன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் யாகூப்பின் உறவினரான மொய்தீன் என்பவருக்கு தொடர்பிருக்குமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட பாண்டிபஜார் காவல்துறையினர், மொய்தீனுடன் செல்போன் தொடர்பில் இருந்தவர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஆலன், போரூரை சேர்ந்த விஜய், வண்டலூரை சேர்ந்த சுகுமார், செங்கல்பட்டை சேர்ந்த லோகேஷ், கூடுவாஞ்சேரியை சேர்ந்த மகேஷ், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பிதுரை மற்றும் லொகேஷ்குமார், ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த எல்லையப்பன், ஆகிய எட்டுபேரும் அடிக்கடி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த 8 பேரின் எண்களும் அவர்களுக்குள் தொடர்ந்து இணைப்பில் இருந்ததை கண்டறிந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. யாகூபின் சகோதரர் ரூபில் என்பவருக்கு மொய்தீன் 40 லட்சம் ரூபாய் கடனாக வழங்கி இருந்த நிலையில், அவர் திருப்பி தராமல் காலம் தாழ்த்தவே கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை பெற ஆலன் உள்ளிட்ட 8 பேரையும் மொய்தீன் யாகூப் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.