புதுச்சேரி இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் மற்றும் தொழிலாளர் துறை இணைந்து, இந்தியாவில் முதல் ’இளையோர் உதவி எண் கைபேசி செயலி’யை இன்று வெளியிட்டது. இதனை புதுச்சேரி தலைமைப் போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் மற்றும் மனநல மருத்துவர் பாலன், பேராசிரியர் ஜெயின் ஆகியோர் வெளியிட்டனர். இதில், புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தற்கொலையில் புதுச்சேரி இரண்டாமிடம்!
புதுச்சேரி: 2018 ஆம் ஆண்டின் தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் அறிக்கைப்படி தற்கொலைகள் நடப்பதில் புதுச்சேரி மாநிலம் இரண்டாமிடத்தில் இருப்பதாக இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய நிறுவனர் சிவா மதியழகன்,
”புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, புதுச்சேரி மாநிலம் நாட்டின் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 50 விழுக்காட்டிற்கு மேல் இதில் பாதிக்கப்படுவோர் 14 முதல் 35 வயதுடைய இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு மது உள்ளிட்டவைகளும் ஒருவகை காரணியாக அமைந்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள இளையோரை மீட்கும் வகையில் புதுச்சேரி இளையோர் உதவி எண் கடந்த 2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. இது தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து, பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் மனநல ஆலோசனைகள், கல்விக்கடன் ஆதரவு, வாழ்க்கை வழிகாட்டி, வேலைவாய்ப்பு உதவி மற்றும் தொழில் முனைவோர் வழிகாட்டல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன “ என்றார்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம்