தற்கொலை
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜி. பரமேஸ்வரின் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ். ராமன்நகர் மேலேஹள்ளி பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், தனது மனைவி சௌமியாவுடன் மலதஹள்ளி பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனபாரதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியப்படி ரமேஷ் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணித்த இடத்திற்கு கீழே கடிதம் ஒன்றும் சிக்கியது.
கடிதம்
அந்த தற்கொலைக் கடிதத்தில், வருமான வரித்துறை கொடுத்த அழுத்தம் காரணமாக தாம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு இருந்தது. ரமேஷின் மரணம், கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷின் கடைசி நிமிடங்கள் உருக்கமானவை. கடும் மன அழுத்தத்தில் இருந்த ரமேஷ், தனது நெருக்கிய நண்பர்கள் இரண்டு பேரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.
உருக்கமான உரையாடல்
அப்போது, “வருமான வரித்துறையின் நடவடிக்கை தமக்கு பயத்தை அளிக்கிறது. நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறி விட்டு உடனடியாக செல்போன் இணைப்பை துண்டித்து விட்டதாகவும், மீண்டும் அவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது, முடியவில்லை என தெரிவித்தனர்.