காவல் துறையினரால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நகை பறித்த முதியவர் கைது
திருவொற்றியூரைச் சேர்ந்த சரோஜா என்பவர் தனது பேத்தியிடம் சாலையில் நடந்து செல்லும்போது கழுத்தில் உள்ள நகைகளை கழற்றி காகிதத்தில் மடித்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, அவரது பேத்தியும் சம்பவத்தன்று நகைகளை கழற்றி காகிதத்தில் மடித்து கையில் வைத்துக் கொண்டு தங்கச்சாலை பகுதியில் நடந்துசென்றார். அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் பாஷா என்ற முதியவர், நகையை பறித்துச் சென்றார்.
இந்த வழக்குத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்து அமீர் பாஷாவை கைது செய்து அவரிடமிருந்து ஒன்பது பவுன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஒரு நம்பர் லாட்டரி சீட் விற்பனை செய்தவர் கைது
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டை விற்பனை செய்த நீலாங்கரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட ஒரு நம்பர் லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்றவரை கைது செய்த காவல் துறை
துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதேப் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம், அவரது மனைவி ஜோதி ஆகியோரை துரைப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் 31 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.